Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூரு சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா

நவம்பர் 24, 2020 07:02

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது இந்த தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அவர் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தொகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் செலுத்தினார். அதனால் அவர் பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி, வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

சிறைக்கு வந்தபோது சசிகலாவுக்கு கன்னடம் பேச தெரியாது. இதனால் சிறை ஊழியர்கள் அவருடன் உரையாடுவது, அவர் சொல்வதை புரிந்துகொள்வதில் சிரமப்பட்டனர். காலப்போக்கில், சசிகலா கன்னடம் கற்க முடிவு செய்தார். அதன்படி அவர் கன்னடம் கற்பதில் தனது ஆர்வத்தை செலுத்தினார். கன்னட ஆசிரியர் மூலம் அவருக்கு முறைப்படி கன்னடம் கற்பிக்கப்பட்டது. இதன் மூலம் கன்னடத்தில் எழுதவும், படிக்கவும், பேசவும் தேர்ந்துள்ளார். அவருடன் சிறை ஊழியர்கள் நன்றாக உரையாடுகிறார்கள். அவர்களுக்கு இடையே மொழி பிரச்சினை இல்லை.
 
தண்டனை கைதிகள், சிறை நிர்வாகம் ஒதுக்கும் பணியை செய்ய வேண்டும். அதன்படி சசிகலா சிறையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு டன் பப்பாளி சாகுபடி செய்துள்ளார். கலப்பட விதை முறையில் பப்பாளி சாகுபடியை அவர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல் அவர் துவரை, பீன்ஸ், கத்திரிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளார்.

இந்த விவசாயம் மட்டுமின்றி ஆடை வடிவமைப்பிலும் சசிகலா ஆர்வம் காட்டி இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது புடவைகளில் டிசைன்ஸ் வடிவமைத்தல், வளையல், செயின், செயினில் கோர்க்கப்படும் குண்டு மணிகள் போன்றவற்றையும் தயாரித்துள்ளார். காலையில் விவசாய தோட்ட வேலை, மதியம் புடவைகளில் டிசைன்ஸ் வடிவமைக்கும் பணிகளை செய்துள்ளார். மாலையில் தியானம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.

மகளிர் சிறைக்கு செல்லும் வழி முழுவதும் சிவப்பு நிற ரோஜா மலர் செடிகளை நட்டு வைத்துள்ளார். 150 செடிகளை அவர் நட்டு வளர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. இன்னும் 2 மாதங்களில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். அதனால் சிறை ஊழியர்களுடன் சசிகலா மிகுந்த பரிவுடன் பேசுவதாக கூறப்படுகிறது. அவரது இந்த பணிவை சிறை ஊழியர்கள் வியந்து பாராட்டுவதாக சொல்லப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்