Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிவர் புயல்; தமிழகம், புதுச்சேரிக்கு உதவத் தயார்: பிரதமர் மோடி உறுதி

நவம்பர் 24, 2020 10:11

நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, புயல் நிவாரணம், மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக உருவாகியுள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, நிவர் புயலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழகம், புதுசேரிக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் முடிந்த உதவிகளைச் செய்யும் என நம்பிக்கை அளித்துள்ளார். மேலும், மழை எச்சரிக்கைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டது. நள்ளிரவு 2.30 மணி நிலவரப்படி புதுவையின் கிழக்கு தென்கிழக்கு திசையிலிருந்து 440 கி.மீ. தொலைவிலும். சென்னையிலிருந்து 470 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலையில் நிவர் புயலாக மாறியுள்ளது.

இன்று மாலையில் இது தீவிரப் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே நிவிர் தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதி தீவிர புயலாகக் கரையை கடக்கும் என்பதால் ஏழு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல புயல் பாதித்த மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்