Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பாஜக போராட்டம்:  பிரதமரிடம் புகார் அளித்த உத்தவ் தாக்கரே

நவம்பர் 25, 2020 07:46

மும்பை: கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ள 8 மாநில முதல்-மந்திரிகளுடன் நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் சிறப்பு ஆலோசனை நடத்தினார். அப்போது மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் மராட்டியத்தில் பா.ஜனதா கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக பிரதமரிடம் மறைமுகமாக புகார் அளித்தார். மேலும் அவர் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, தற்போது உள்ள சூழலில் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

மராட்டியத்தில் பா.ஜனதாவினர் அதிக மின்கட்டண வசூலை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல அவர்கள் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே நேற்று நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பேசியதாக மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில கட்சிகள் விதிகளை மீறி வீதிகளில் போராட்டம் நடத்தி மக்களின் உயிருடன் விளையாடுகின்றன. தற்போது உள்ள சூழல் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடவேண்டாம் என உத்தரவிட வேண்டும். அரசு ஒருபுறம் பொதுமக்களை முககவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் உத்தரவிட்டு வருகிறது. ஆனால் மறுபுறம் அரசியல் கட்சிகள் வீதிகளில் அரசியல் விளையாட்டை விளையாடி வருகின்றன. இது எங்களின் எல்லா முயற்சிகளையும் தோற்கடித்து 2-வது கொரோனா அலைக்கு வழிவகுக்கும்.

மராட்டியத்தில் கடந்த மாதம் தினந்தோறும் கொரோனா பாதிப்பு சுமார் 24 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 4 ஆயிரத்து 700 முதல் 5 ஆயிரமாக குறைந்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்