Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளிகளை தத்தெடுப்பது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம்: எடியூரப்பா

நவம்பர் 25, 2020 08:04

பெங்களூரு: கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:- கர்நாடக அரசுடன் மக்களும் கைகோர்த்து அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருவது ஒரு வித்தியாசமான திட்டம் ஆகும். இதன் மூலம் அரசு பள்ளிகள் முழுமையான வளர்ச்சி பெறும். எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் தங்களின் பதவி காலத்தில் குறைந்தது 3 அரசு பள்ளிகளை ஆவது தத்தெடுத்து அதை தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மேம்படுத்த வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. மாநிலத்தில் தற்போது 34 அரசு பள்ளிகள் தற்போது தத்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நாட்டிலேயே இது ஒரு முன்மாதிரி திட்டம் ஆகும். பள்ளிகளை தத்தெடுப்பவர்கள், அவ்வப்போது அந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பெற்றோர்-ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி பள்ளியின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார். இதில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேசும்போது கூறியதாவது:-

நமது மாநிலத்தில் மடங்கள், கல்வி நிறுவனங்கள் பாகுபாடின்றி கல்வியை வழங்கி வருகின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே மடங்கள் இந்த கல்வி சேவையை ஆற்றி வருகின்றன. இதன் காரணமாக இன்று கர்நாடகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. பல்வேறு அமைப்புகள் முன்வந்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து அவற்றை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறந்த கல்வியை பெற முடியும்.இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

விழாவில் மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேசியதாவது:-
கூலித்தொழில் செய்கிறவர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருமானத்தில் 20 சதவீதத்தை கல்வி கட்டணமாக செலுத்து வருகிறார்கள். அவர்கள் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் அந்த 20 சதவீத வருமானத்தை சொந்த குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்தி வருகிறோம். இதில் சமுதாய அமைப்புகள் பங்கேற்பது என்பது ஒரு நல்ல விஷயம் ஆகும்.

கர்நாடகத்தில் 53 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. 85 சதவீதம் பேர் அரசு பள்ளிகளை நம்பியுள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வரும் காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வர வேண்டும். நாட்டின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் படித்து பெரிய ஆளாக வர வேண்டும்இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் பேசினார். மேலும் மந்திரி சுரேஷ் குமார், தனது ராஜாஜிநகர் தொகுதியில் 5 அரசு பள்ளிகளை தத்தெடுப்பதற்கான சான்றிதழை முதல்-மந்திரியிடம் இருந்து பெற்றார்.

தலைப்புச்செய்திகள்