Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிவர் புயல் தாக்கம்; பண்ருட்டி வட்டத்தில் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின

நவம்பர் 26, 2020 07:46

வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனிடையே வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று (நவ. 26) அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பலத்தக் காற்றுடன் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து, மாவட்டத்தில் கிழக்குப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை நிலைவரப்படி, கடலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் 28 செ.மீட்டர் மழையும், பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர் நகரில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக, பண்ருட்டி வட்டம் அண்ணாகிராம ஒன்றியத்துக்குட்பட்ட அவியனூர், அழகு பெருமாள் குப்பம், பேரங்கியூர் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. மேலும், கரும்பு தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. பலத்தக் காற்று வீசியதால், குமணன்குளம், நடவீரப்பட்டு, பாலூர் பகுதியில் வாழை மரங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து, கடலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரியும், வேளாண்துறை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி, மாவட்ட ஆட்சியர், மழைநீர் வெளியேற்றுவது தொடர்பாக பொதுப்பணித் துறையினரிடம் ஆலோசித்து வருகின்றனர். மேலும், மழைநீரில் மூழ்கியுள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கீடு செய்து, இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
 

தலைப்புச்செய்திகள்