Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திடீரென பிறப்பிக்கப்பட்ட 144 தடையால் குளறுபடி- புதுவையில் பொதுமக்கள் அவதி

நவம்பர் 27, 2020 05:51

புதுச்சேரி: நிவர் புயல் தாக்கினால் அதை சமாளிக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி இரவு 9 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மார்க்கெட், கடைகள், தியேட்டர், மால், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மரக்காணம் அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்த தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதற்கிடையே நேற்று காலை முதல் கடைகள், மார்க்கெட், ஓட்டல்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.

இந்தநிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகிக்கும் பூர்வா கார்க் திடீரென வெளியிட்ட அறிவிப்பில், 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி போலீசார் ஒவ்வொரு பகுதியாக சென்று திறக்கப்பட்ட ஓட்டல்கள், கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர். இதனால் திறக்கப்பட்ட கடைகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை மறித்து 144 தடை இன்று (நேற்று) மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறி வெளியே நடமாட தடை விதித்து எச்சரித்து அனுப்பினர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த விவரம் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு சென்றது. இந்தநிலையில் பகல் 11.30 மணியளவில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா வாக்கி டாக்கி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு 144 தடை உத்தரவு பகல் 12 மணி முதல் விலக்கி கொள்ளப்படுகிறது. எனவே வியாபாரிகள், பொதுமக்களை எச்சரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இப்படி 144 தடை உத்தரவை அமல்படுத்துவதிலும், விலக்கி கொள்வதிலும் ஏற்பட்ட அரசின் குளறுபடியால் பொதுமக்கள் குழப்பமடைந்ததுடன் அவதிக்குள்ளானார்கள். உணவுகள் தயாரித்து வைத்து இருந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்