Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளத்தில் மிதக்கும் வேலூர் மாவட்டம்- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

நவம்பர் 27, 2020 06:27

வேலூர்: வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அதைத்தொடர்ந்து நிவர் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்தது. அதனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது. இரவு 10.30 மணி முதல் மழையின் வேகம் அதிகரித்தது. விடிய, விடிய மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 38 செ.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது. வேலூர், அம்முண்டி சர்க்கரை ஆலை, காட்பாடி பகுதியில் அதிகளவு மழை பெய்திருந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் மிதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூரில் பல இடங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. சில சமயங்களில் இடி சத்தம் கேட்டது. தொடர்ச்சியாக வேலூர் மாநகரில் மதிய வேளையில் பலத்த காற்று வீச தொடங்கியது. அதனால் மழையின் வேகமும் அதிகரித்தது. சாலையோர மரங்கள், தென்னை மரங்கள் காற்றினால் தலைவிரித்து ஆடின. நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரமும், காற்றின் வேகமும் கூடியது. மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழையளவு பதிவானது. அதிகபட்சமாக பொன்னையில் 16 செ.மீ. மழை பெய்திருந்தது.

பொதுவிடுமுறை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில ஓட்டல்கள், டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. கனமழை காரணமாக வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காட்பாடிசாலை, ஆற்காடுசாலை, ஆரணிசாலை, பெங்களூரு சாலை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை வெள்ளம் சூழந்தது. பல இடங்களில் ஆறுபோன்று மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர் கன்சால்பேட்டை காந்திநகர், இந்திராநகர், சம்பத்நகர், காட்பாடியில் சில பகுதிகள் என்று 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் கல்விசான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்து வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு சென்றனர். கன்சால்பேட்டை, இந்திராநகர், சம்பத்நகர் பகுதியை சேர்ந்த 120 பேர் கொணவட்டம் அரசுப்பள்ளி, அம்பேத்கர்நகர் அரசுப்பள்ளி உள்ளிட்ட 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜவ்வாதுமலைத் தொடரில் இருந்து உருவாகி மேல்அரசம்பட்டு வழியாக ஓடும் உத்திரகாவேரி (அகரம்) ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளம் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. நிவர் புயல் மழை காரணமாக நேற்று இரவில் இருந்து உத்திரகாவேரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மேல்அரசம்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து, அங்குக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உத்திரகாவேரி ஆற்று கரையோரம் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதியில் 3 ஆயிரத்து 460 கனஅடியும், கவுண்டன்ய நதியில் 3 ஆயிரத்து 320 கனஅடியும், அகரம் ஆற்றில் 4 ஆயிரம் கனஅடியும், பொன்னை ஆற்றில் 7 ஆயிரத்து 40 அடியும், பாலாற்றுக்கு 17 ஆயிரத்து 820 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் மாங்காய் மண்டி அருகேயுள்ள நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கால்வாய்க்கு வரும் சிறிய கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக திடீர்நகருக்குள் மழைநீர் புகுந்து, அங்கிருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 படகுகளுடன் உடனடியாக அங்கு சென்றனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினருடன் இணைந்து வீடு, வீடாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வசித்த 200 பேரை படகு மூலம் மீட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். வேலூரில் இருந்து பாலமதி செல்லும் மலைப்பாதையில் ஒரு வளைவு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த பாறையும் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பலத்த காற்றினால் வேலூர் தாலுகா சிங்கிரிகோவில் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 10 ஏக்கர் வாழைமரங்கள் சரிந்து சேதமடைந்தது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் முதல்கட்டமாக 15 ஏக்கர் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழையினால் 38 மரங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அப்புறப்படுத்தினர். வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கொட்டி தீர்த்த மழையால் 132 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பப்பாளி, நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 72 மரங்கள், 10 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 40 வீடுகளும் இடிந்துள்ளன. இந்த வீடுகளில் வசித்தவர்களும், தாழ்வான பகுதி, ஆற்றங்கரையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி, குடிசை வீடுகளில் வசித்த 1,120 பேர் மீட்கப்பட்டு 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பெரும் பொருட்சேதமோ, எவ்வித உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.நாள் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வேலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெய்த மழையின் அளவு (செ.மீ.) வருமாறு:- பொன்னை-162.4, வேலூர்-131.7, அம்முண்டி சர்க்கரை ஆலை-129.2, காட்பாடி-109.2, குடியாத்தம்-76.4, மேல்ஆலத்தூர்-60 மாவட்டம் முழுவதும் 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழை பெய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்