Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மைதானம் போன்ற கேக்கை வெட்டமறுத்த மாரடோனா; கால்பந்து காதலை அப்போதுதான் கண்டேன்:  பினராயி விஜயன் நெகிழ்ச்சி

நவம்பர் 27, 2020 09:20

மைதானம்போல வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டமறுத்த மாரடோனாவின் கால்பந்து காதலை அப்போதுதான் கண்டுகொண்டேன்'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக புதன்கிழமை அன்று உலகின் புகழ்வாய்ந்த பிரபல கால்பந்து வீரர் டியாகோ அர்மாண்டோ மாரடோனா (60) காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசின் மாநில விளையாட்டுத் துறையின் சார்பாக இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரடோனா கேரளாவுக்கு 2012-ல்வருகை தந்த நினைவை பிடிஐயிடம் பகிர்ந்துகொண்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதுகுறித்து அவர் கூறியதாவது:டியாகோ மாரடோனாவின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் தனது சிறந்த கால்பந்து வீரனை இழந்து தவிக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள பல கால்பந்து வீரர்களைப் போல, நானும் 1986 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவதையும் கோப்பையை உயர்த்துவதையும் பார்த்த பிறகு அவரது திகைப்பூட்டும் விளையாட்டால் கால்பந்து விளையாட ஆரம்பித்தேன், கிட்டத்தட்ட தனியாகவே.

ஆனால் கண்ணூரில் 2012 இல் அவரை நேரில் பார்த்தபோதுதான் கால்பந்து என்றால் மரடோனாவுக்கு எத்தகைய காதல் என்பதை புரிந்துகொண்டேன். அன்றைய நாள் நிகழ்ச்சியில் விழாவின் ஒரு பகுதியாக, ஒரு மைதானம் போல வடிவமைக்கப்பட்டிருந்த கேக் ஒன்றின் கால்பந்தும் வைக்கப்பட்டிருந்தது. மரடோனா அதைப் பார்த்த தருணத்தில், அதை வெட்ட மறுத்துவிட்டார். அதன் ஓரப் பகுதிகளை மட்டும் வெட்டுவதாக அவர் கூறியபோதுதான் மரடோனாவுக்கு கால்பந்து மற்றும் மைதானத்தின் மீது எவ்வளவு காதல் என்பதை கண்டறிந்தேன்.

மேடையில் அவருடன் விளையாடிய இரண்டு நிமிட கால்பந்து விளையாட்டுகூட எனது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சாதனை என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். அவரை சந்தித்த நிமிடங்களில் மாரடோனாவின் வெளிப்படையான பேச்சு மற்றும் குழந்தை போன்ற உற்சாகம் என்னை ஈர்த்தது. அந்த குழந்தைத் தனம் மற்றும் உற்சாகத்திற்கு காரணமாக பல சிக்கல்களுக்குப் பின்னால் இருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் பதற்றமான அவரது வாழ்க்கையாகவும் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

அவருக்கு ஒரு குழந்தையின் இதயம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய நேர்மையான அணுகுமுறை அவருக்கு எல்லா பிரச்சினைகளையும் உருவாக்கியிருக்கலாம். அவர் எதைக்குறித்தும் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார், என்பதை அவரது முகமே சொல்கிறது. அவர் இறந்திருக்கலாம், ஆனால் கால்பந்து வீரர்களின் இதயங்களில் அவர் என்றென்றும் வாழ்வார். என்னைப் பொறுத்தவரை, மாரடோனா ஒரு கடவுள், கடவுள் இறக்க மாட்டார். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்