Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை அழகுபடுத்த ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நவம்பர் 29, 2020 10:12

சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஏற்கெனவே அனுப்பிய கடிதத்தில், ‘‘பல்லவர் கால கடற்கரை நகரமான மாமல்லபுரம் தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. மாமல்லபுரத்தை யுனெஸ்கோவும் கலாச்சார சின்னமாக அங்கீகரித்துள்ளது.

எனவே மாமல்லபுரத்தில் உள்ளஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அங்குள்ள தொன்மையை பழமை மாறாமல் நிரந்தரமாக பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். கடற்கரை கோயில் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கலாச்சாரங்களை பாதிக்கும் வகையில் எந்தவொரு கட்டுமானங்களுக்கும் அனுமதிஅளிக்கக்கூடாது. குப்பைகளை கொட்டினால் குறைந்தபட்சம் ரூ. 1,000 அபராதம் விதிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள புராதன சின்னங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், முக்கிய இடங்களை மின்னொளியில் அழகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த கடிதத்தை உயர் நீதிமன்றநீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தவழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், மாமல்லபுரம் போன்ற 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.5 ஆயிரத்து 109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், மாமல்லபுரத்தை அழகுபடுத்த மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால் மத்திய,மாநில அரசுகளின் செயலர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.மேலும் அடுத்த விசாரணைக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரும், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதுதொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளின் செயலர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

தலைப்புச்செய்திகள்