Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் தேர்தல் ரத்து ஆகுமா?

ஏப்ரல் 01, 2019 10:26

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. 

இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் ரூ.78.12 கோடி சிக்கியுள்ளது. தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்படும். உரிய ஆவணங்கள் இல்லாத பணம், நகைகள் பறிமுதல் செய்யப்படும். 

வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம். வருமான வரித்துறை மற்றும் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடக்கிறது. வேலூரில் நடத்தப்பட்டு வரும் சோதனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்கு மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

வேலூர் தொகுதியில் சோதனை நடத்துவதற்கு காரணமான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். அவற்றை வருமானவரித்துறை கணக்கிட்டு வருகிறது. மேலும் வேலூர் தொகுதியில் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். 

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்வது பற்றி தலைமை தேர்தல் ஆணையம்தான் ஆலோசித்து முடிவு செய்யும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார்.  
 

தலைப்புச்செய்திகள்