Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் புதிதாக 60 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு

டிசம்பர் 02, 2020 10:52

புதுச்சேரியில் இன்று புதிதாக 60 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 2) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 3,431 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரி-29, காரைக்கால்-11, மாஹே-20 என மொத்தம் 60 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் இன்று யாருக்கும் தொற்று இல்லை.

மேலும், புதுச்சேரி ஒதியஞ்சாலை பகுதியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 612 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 79 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 152 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 280 பேர் என மொத்தம் 432 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 65 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 35 (97.18 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 8,641 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 318 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

தற்போது நிறைய பேர் முகக்கவசம் அணியாமல் செல்வதைப் பார்க்க முடிகிறது. முகக்கவசம் அணிந்து செல்பவர்களில் பலர் அதனை மூக்கு, வாய்ப் பகுதிகளில் போடாமல் கழுத்துப் பகுதியில் அணிந்து செல்கின்றனர். இன்னும் 2, 3 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற அரசின் விதிமுறைகளைப் பொதுமக்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த வைரஸ் தொற்று குளிர் காலங்களில் அதிக அளவில் பரவும் என்று சொல்லப்படுகிறது. மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் நெருங்கி வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால் புதுச்சேரி மாநிலத்தைக் கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற முடியும்" எனத் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்