Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனா தயாரித்த உளவு விமானங்களை பயன்படுத்தி வரும் பாகிஸ்தான்: உளவுத் துறை அதிர்ச்சித் தகவல்

டிசம்பர் 02, 2020 11:28

காஷ்மீரின் ஜம்மு மாவட்டம் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் 2 நாட்களுக்கு முன்பு பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எப்) உளவு விமானத்தை நோக்கி சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, அந்த விமானம் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பிஎஸ்எப் ஐஜி என்.எஸ்.ஜம்வால் தெரிவித்திருந்தார்.

இதுபோன்று சமீப காலங்களில் அதிகளவில் ஆளில்லாத உளவு விமானங்கள் எல்லைப் பகுதியில் பறப்பதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஜிகாத் எனப்படும் புனிதப் போருக்கு ஆயுதமாக இதைப் பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய ஆயுதமாக சீனாவில் தயாரிக்கப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் உள்ளன என்று இந்திய உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எல்லையைத் தாண்டி ஆயுதங்கள், வெடிமருந்துகளைக் கடத்துவதற்கு தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்த பயங்கர சதி வேலை நடைபெறுகிறது. தீவிரவாத இயக்கங்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பும் இந்த ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துகிறது.

மிகவும் முன்னேறிய வகையிலான ஆளில்லாத விமானங்களாக இவை உள்ளன. இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. அதிக எடையிலான ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் பகுதியில் ஆளில்லாத விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கொண்டு வந்து போடப்படுகின்றன. அந்த ஆயுதங்களை தீவிரவாதிகள் எடுத்துச் சென்று அதை சதிவேலைக்குப் பயன்படுத்துகின்றனர். பஞ்சாபில் மட்டும் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் ஆயுதங்களுடன் சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 ஆளில்லாத விமானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அடுத்த 2 மாத காலங்களிலும் பனிப்பொழிவு அதிகம் நிலவும் என்பதால் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அதிகளவு எதிரி நாட்டு ஆளில்லாத விமானங்கள் பறந்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராணுவத்தினர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உளவுத் துறை மூத்த அதிகாரி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்