Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

டிசம்பர் 03, 2020 11:14

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லி நோக்கிய போராட்டம் 8-வது நாளாக டெல்லியின் புறநகரில் நீடித்து வருகிறது.

கடும் குளிர், கரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயிகள் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதான் மத்திய அரசுக்குக் கடைசி வாய்ப்பு. இதில் தீர்வு எட்டாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''விவசாயிகளையும், அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை எண்ணி நான் மிகுந்த வேதனைப்படுகிறேன். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாக வாபஸ் பெற வேண்டும். இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் போராட்டத்தைத் தொடங்குவோம். தொடக்கத்திலிருந்தே நாங்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து வந்தோம். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நாளை நடத்தப்பட உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் சாமானிய மக்களை அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் எவ்வாறு பாதிக்கிறது, விலைவாசியை உயர்த்துகிறது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். மத்தியில் ஆளும் அரசு ஒவ்வொன்றையும் விற்பனை செய்கிறது. ஆனால், உங்களால், ரயில்வே, ஏர் இந்தியா, நிலக்கரி, பிஎஸ்என்எல், பிஹெச்இஎல், வங்கிகள், பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றை விற்க முடியாது. அரசு நிறுவனங்களை விற்பனை செய்யும் தனியார்மயக் கொள்கையைத் திரும்பப் பெறுங்கள். நாட்டின் சொத்துகளை பாஜகவின் தனிப்பட்ட சொத்துகளாக மாறுவதை நாங்கள் கண்டிப்பாக அனுமதிக்கமாட்டோம்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள், மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால், டெல்லியின் சாலைகள் அனைத்தையும் மறிப்போம், அடுத்த நடவடிக்கைகக்குச் செல்வோம் என எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்