Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன?- ராகுல் காந்தி கேள்வி

டிசம்பர் 03, 2020 12:11

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு ஒரு விதமாகவும் பிரதமர் ஒருவிதமாகவும் பேசுகிறார்கள். பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், “ நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு ஒருபோதும் கூறவில்லை.

அறிவியல் ரீதியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் கரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது” என்று கூறினார். ஆனால், பிரதமர் மோடி பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசுக்குள்ளேயே இரு விதமான கருத்துகள் எழுந்ததையடுத்து, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி பெறுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பேசும்போது, ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பாஜக அறிவித்தது.

இப்போது, ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. உண்மையில் , கரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்