Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இழுபறி நீடிப்பு - மத்திய அரசுடன் விவசாயிகள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

டிசம்பர் 04, 2020 07:04

புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நேற்று 8-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு கடந்த 1-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

எனவே சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் இருக்கும் கவலைகளை மத்திய மந்திரிகள் கேட்டறிந்தனர். பின்னர் இந்த கவலைகள் மற்றும் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.

ஆனால் அந்த சட்டங்களில் உள்ள ஓட்டைகள் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய விவசாயிகள், மந்திரிகளின் உறுதிப்பாட்டை ஏற்க மறுத்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததுடன், எந்தவித முடிவும் ஏற்படாமல் முடிவடைந்தது. எனவே நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை சுமார் 8 மணி நேரம் நீண்டது.

இதுதொடர்பாக, வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித ஈகோவும் இல்லை. அவர்களது கவலைகளைப் பரிசீலிப்பதில் அரசு திறந்த மனதுடன் உள்ளது. நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உறுதியான தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்