Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர் வடிய வழியில்லாததால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சூழ்ந்துள்ள மழைநீர்

டிசம்பர் 04, 2020 10:57

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று
(டிச.3) இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. தாழ்வான
பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கியது.

இந்த நிலையில், மழை தண்ணீர் வடிய வழியில்லாததால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மழைநீர்
தேங்கி நிற்கிறது. நடராஜர் கோயில் குளமான சிவகங்கை குளம் நிரம்பி வழிகிறது. நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை பகுதி மற்றும்
கோயில் வளாகப் பகுதி முழுவதும் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

நடராஜர் கோயிலில் பெய்யும் மழைநீர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே பூமிக்கு அடியில் உள்ள பெரிய அளவிலான வடிகால்
வாய்க்கால் வழியாக தில்லையம்மன் கோயில் குளத்துக்குச் செல்லும். அந்தக் குளம் நிரம்பியவுடன் அதில் இருந்து தண்ணீர் வடிகால்
வாய்க்காலான தில்லையம்மன் ஓடைக்குச் செல்லும் வகையில் வடிகால் வசதி அரசர்கள் காலத்திலேயே செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய்விட்டதால் தண்ணீர் வடியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது. கோயில் இருக்கும்
மழைநீரை வடிய வைக்கும் பணியில் கோயில் பொதுதீட்சிதர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ.
மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


 

தலைப்புச்செய்திகள்