Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

டிசம்பர் 06, 2020 07:40

சென்னை:  சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் கடந்த 2006-ம் ஆண்டு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இவை கடந்த 2012-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டன. அப்போது, இந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய 63 உதவி பேராசிரியர்களையும், 13 ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் நிரந்தரம் செய்யுமாறு பல்கலைக்கழக சிண்டிகேட் நியமித்த வி.பி.முத்துசாமி குழு பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்தப் பரிந்துரையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த பரிந்துரைகளை அமல்படுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், வி.பி.முத்துசாமி குழுவின் பரிந்துரையை அமல்படுத்த முடியாது என்று கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானம் இயற்றியது.

இதனால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உதவி பேராசிரியர் சரவணகுமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கருணாமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, வி.பி.முத்துசாமி குழு பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறினர். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்