Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

டிசம்பர் 07, 2020 12:39

சென்னை: 

திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எனது நிலம் உள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு அதற்கான பட்டா எனது தந்தை பெயரில் வாங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் எனது நிலத்தை சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தனர். இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் வழக்கு துறையூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழிகாட்டுதலின்படி, மாவட்ட குற்றவியல் காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டது. இதுபோன்று பல தனி நபர்கள் மற்றவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தங்களது பெயருக்கு நிலத்தை பதிவு செய்து கொள்கின்றனர்.

மேலும் நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தை காப்பாற்ற முடியும்.

எனவே ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களைப்போல தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றி தனி நபர்களிடம் இருந்து நில அபகரிப்பை தடுக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ஆந்திரபிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் நில அபகரிப்பு தடை சட்டம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துகிறது.

தரிசு நிலங்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் வெள்ளை சட்டை அணிந்த அரசியல் கட்சியினர் அங்கு கட்சிக்கொடியை ஊன்றி நிலத்தை பட்டா போட்டு விடுகின்றனர். பொது மக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 16ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்