Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘புரெவி’ புயலால் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமி கடலூரில் ஆய்வு

டிசம்பர் 08, 2020 10:43

கடலூர்: வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 26-ந் தேதி மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் வலுவிழந்து சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சுழன்று வீசிய காற்றுக்கு கடலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் உள்பட ஏராளமான பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். இதனை அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அன்றைய தினமே கடலூர் வந்தார். பின்னர் புயல் சேதங்களை ஆய்வு செய்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த புயலின் தாக்கம் மறையும் முன்பு அடுத்து புரெவி புயல் கடலூர் மக்களை புரட்டிப்போட்டது. வரலாறு காணாத அளவில் மழை பொழிந்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஒரே நாளில் மாவட்டத்தில் 44 செ.மீ. மழை பதிவானதால் வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள்ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தது. இந்த ஏரிகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது.

அடைமழை காரணமாக 300 கிராமங்களை மழைவெள்ளம் சூழ்ந்தது. எனவே இந்த பகுதி முழுவதும் தீவுபோல் காட்சி அளித்தது. தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்ட பகுதியில் வெள்ளம் வடியவில்லை. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த மழைக்கு மாவட்டத்தில் சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதுதவிர வாழை, மணிலா, காய்கறி உள்ளிட்ட பயிர்களும் பாதிப்படைந்தது. இதனால் விவசாயிகள் நிலைகுலைந்துள்ளனர். புயல்சேதம் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

சேதம் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வசம் சமர்ப்பித்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது முறையாக கடலூர் மாவட்டத்தில் புயல் சேதங்களை பார்வையிட இன்று வருகிறார். சென்னையில் இருந்து கார் மூலம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன்பின்னர் கடலூர் சுற்றுலா மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் முதல் கட்டமாக பெரியபட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு சிதம்பரம் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி இளமையாக்கினார் கோவில் குளம் அருகில் மழையால் உள்வாங்கிய சாலையை பார்வையிடுகிறார்.

இதையடுத்து சாலியதோப்பு பகுதிக்கு செல்லும் அவர் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர்களை பார்வையிட உள்ளார். அதனைத்தொடர்ந்து வல்லம்படுகை செல்லும் அவர் அங்கு மழைவெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குகிறார். இதனை முடித்து கொண்டு கார்மூலம் நாகை மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி பாதுகாப்புக்காக 1,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்