Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கார் மீது கல்வீசி தாக்குதல்

டிசம்பர் 10, 2020 09:47

சென்னை: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்கையில் அவரது வாகனம் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இதற்கு பாஜ.,வினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அவரின் வாகனத்தை மறிக்க முற்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பு வாகனத்தில் பா.ஜ., எதிர்ப்பாளர்கள் சிலர், கற்களை வீசி தாக்கினர். இதில், ஒரு வாகனத்தில் வந்த பாஜ., தலைவர்கள் தீபஞ்சன் குஹா, கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோரின் காருக்குள் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கற்கள் வந்து விழுந்தன. இந்த சம்பவத்திற்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கைலாஷ் விஜயவர்ஜியா கூறுகையில், ‛இந்த தாக்குதலில் நான் காயமடைந்துள்ளேன். கட்சித் தலைவரின் காரும் தாக்கப்பட்டது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். போலீசார் முன்னிலையில், குண்டர்கள் எங்களை தாக்கினர். நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இல்லை என்பது போல் உணர்ந்தோம்.' என்றார்.

பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது: எங்களது ஒரு கார் விடாமல் அனைத்து கார்களும் தாக்கப்பட்டுள்ளன. நான் குண்டு துளைக்காத காரில் பயணம் செய்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன். மேற்கு வங்கத்தில் இந்த சட்டவிரோதம் மற்றும் சகிப்பின்மை முடிவுக்கு வர வேண்டும்.

இந்த தாக்குதலில் முகுல் ராய் மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் காயம் அடைந்தனர். இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம். 2021ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., அடுத்த அரசாங்கத்தை அமைக்கும், தாமரை மலரும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்