Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெரினாவில் ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்; மாநகராட்சி அழைப்பு

டிசம்பர் 11, 2020 06:31

சென்னை: மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர்
பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியினால் ஒப்பந்தப்புள்ளி மூலம் மெரினா கடற்கரைக்கு 900 ஸ்மார்ட் வண்டிகள் வாங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஸ்மார்ட் வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வண்டிகள் இரண்டு விதமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. 

முதல் வகையில் மொத்தமுள்ள 900 வண்டிகளில் 60 விழுக்காடு மெரினா கடற்கரையில் தற்போதுள்ள தெரு விற்பனையாளர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும்.

அடுத்த வகையில், விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 40 விழுக்காடு திறந்த நிலையில் வைக்கப்படும். அவர்கள் தற்போது மெரினா கடற்கரையில் தெரு விற்பனையாளர்களாக இல்லாமல் அங்கு தங்கள் தொழிலை தொடங்க விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

இது தற்போதுள்ள தெரு விற்பனையாளர்களுக்கும் புதிய ஆர்வலர்களுக்கும் இடையே நியாயமான சமநிலையை வழங்க வகை செய்கிறது. இதற்காக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விற்பனை கட்டணம், விற்பனை நேரம், மாத வாடகை தொகை, பராமரிப்பு கட்டணம், அபராதத் தொகை போன்ற விவரங்களைக் கொண்ட இரண்டு வகையான விண்ணப்பங்கள் ரிப்பன் மாளிகையிலுள்ள வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். 

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் அலுவலர் அலுவலகம் தலைமையிடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரத்யேக பெட்டியில் கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

விண்ணப்பத்திற்கான கூடுதல் தகவல்கள்: விண்ணப்பம் பெறப்படும் தேதி 21.12.2020 முதல் 26.12.2020 வரை (ஐந்து நாள்கள்) 25.12.2020 ஒருநாள் பொதுவிடுமுறை நீங்கலாக விண்ணப்பத்தை கூர்ந்தாய்வு செய்தல் 29.12.2020 முதல் 31.12.2020 வரை விண்ணப்பத்தை இறுதி செய்தல் 06.01.2021 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு பணி முடிவடைந்த பிறகு கடை ஒதுக்கீடு முடிவு செய்யப்படும்.

தலைப்புச்செய்திகள்