Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா ஆசியுடன் அராஜகம் நடக்கிறது- ஜெ.பி.நட்டா சாடல்

டிசம்பர் 11, 2020 08:03

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் ஆசீர்வாதத்துடன்தான் அராஜகம் அரங்கேறுகிறது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று (டிச. 10) மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, டைமண்ட் துறைமுகத்திற்கு இருவரும் சென்றுகொண்டிருந்தபோது அவர்களது பாதுகாப்பு வாகனம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. பெரிய செங்கல் ஒன்றும் இந்தப் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி எறியப்பட்டது. இதில் ஜெ.பி. நட்டாவுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. விஜய் வர்கியாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு அக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் இது குறித்து ஜெ.பி. நட்டா, “மேற்கு வங்கத்தில் அராஜகம் உச்சத்தில் உள்ளது. சட்டவிரோதம் தலைதூக்கியுள்ளது. இவையனைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்கிறது. இருந்தபோதிலும், பாஜக ஜனநாயக முறையாக மக்களை அணுகும். அதில் வெற்றிபெற்று, மேற்கு வங்கத்தில் தாமரை மலரும்” எனத் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்