Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.114 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடம்; முதல்வர் அடிக்கல் நாட்டினார்

டிசம்பர் 11, 2020 09:24

சென்னை: 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதேபோன்று, திருச்சிராப்பள்ளி நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் தழைத்து வளர்ந்திட தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எல்கோசெஸ்கள்) நிறுவப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும். இப்பூங்காவில் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருச்சிராப்பள்ளி நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படவுள்ளது. இதில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும். இங்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கும் நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்