Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலின் திடீர் மயக்கம்

டிசம்பர் 11, 2020 10:03

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது திடீர் மயக்கம் ஏற்பட்டதால், கொளத்தூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்தபின்பு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு பரப்புரைகள், கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிச. 11) அவரது தொகுதியான கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, ஸ்டாலினுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் ரத்த அழுத்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் நலம் சரியில்லை என்று வதந்திகள் பரவியதால், திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "லேசான மயக்கம், உடல் சோர்வு இருந்தது. அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி, ரத்த அழுத்தப் பரிசோதனை (BP), ஈசிஜி (ECG) பரிசோதனை ஆகியவற்றை செய்தோம். மற்றபடி NO problem (ஒரு பிரச்னையும் இல்லை). இருந்தாலும், மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு புறப்படச் சொன்னார்கள்" எனத் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, தற்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மேலும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தலைப்புச்செய்திகள்