Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வருமான வரி வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு; நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 11, 2020 11:14

சென்னை: வருமான வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி,. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை, 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டுமே வருமான வரித்துறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை எனக் கூறி இருவர் மீதும் வருமான வரித்துறை 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரின் மனுக்களை கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, தங்களுக்கு எதிரான இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித் தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வின் முன்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (டிச.11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், “வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக முடிக்கும் முன்னரே தங்களுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதற்கு வருமானவரித் துறை சார்பில் முன்னிலையான வழக்குரைஞர், “இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல்செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதியின் வாதத்தை ஏற்று இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் கே.டி. துளசி, வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும்போது வேறு ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மட்டுமே மாற்ற வேண்டும். ஆனால் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது. அவ்வாறு மாற்றியது சட்டவிதிகளுக்கு எதிரானது என வாதிட்டார்.

தலைப்புச்செய்திகள்