Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்; மத்திய அரசு எச்சரிக்கை

டிசம்பர் 12, 2020 12:24

சென்னை: மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (சனிக்கிழமை) 17வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே 3 சட்டங்களிலும் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி எல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.

டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். குர்கான் எல்லை பகுதியில் 2,500 போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோல பரீதாபாத் எல்லை பகுதியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர். அரியானா மாநிலம் வழியாக வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் இந்த ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இந்தநிலையில் இன்று விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டன. குறிப்பாக டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதுபோல சுங்க சாவடிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று மேலும் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பாரதீய கிஷான் யூனியன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விவசாய சட்டங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் போது தங்களது தரப்பு கருத்துக்களை கேட்க வேண்டும் என்று விவசாய அமைப்பு தெரிவித்து உள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் போது பாரதீய கிஷான் அமைப்பு சார்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் அடுத்தக் கட்டமாக ரெயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் திசை திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன. இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லை பகுதிகளில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தார்.

விவசாயிகள் மத்தியில் அரசியல்வாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்களா என்பது பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து டெல்லியை இணைக்கும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் எல்லை பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் தீவிரப்படுத்த அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அமித் ஷா போன்றே மத்திய உணவு, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அவர் கூறுகையில், “விவசாயிகள் தரப்பில் பேசிய சிலர் வேளாண் சட்டம் மட்டுமின்றி வேறு சில விவகாரங்களையும் பேசுகிறார்கள். சர்ஜில் இமாம் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

விவசாயிகள் எதற்காக இமாமை விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கிறார்கள். இதை ஏற்க இயலாது. இத்தகைய கோரிக்கை வைத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த எச்சரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்து உள்ளனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் உள்பட எந்த சமூக விரோத அமைப்பும் ஊடுருவவில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் கூறி உள்ளனர். டெல்லி புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கும் விவசாயிகள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்