Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஐடி சென்னையில் மாணவர்கள் உள்ளிட்ட 71 பேருக்குக் கரோனா

டிசம்பர் 14, 2020 08:34

சென்னை: ஐஐடி சென்னையில் மாணவர்கள் 66 பேருக்கும், ஊழியர்கள் 5 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், விடுதி மாணவர்கள் அனைவருக்கும் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கரோனா பொது முடக்கத் தளர்வுகளில் ஒரு பகுதியாக டிசம்பர் 7ஆம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கவும் விடுதிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஐஐடி சென்னையில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதற்காக 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்தனர். இந்நிலையில் ஐஐடி மாணவர்கள் 66 பேருக்கும், ஊழியர்கள் 5 பேருக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிண்டியில் உள்ள அரசு கரோனா தொற்று சிகிச்சை மையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகவலைச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் ஐஐடி சென்னை மாணவர்கள் அனைவருக்கும் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஐடி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மாணவர்கள் விடுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட 10 சதவீத அளவிலேயே தங்கி இருந்தனர். எனினும் விடுதி மாணவர்கள் சிலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நிர்வாகம் சார்பில் அரசு அதிகாரிகள் மூலம் விடுதி மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்களும் தங்களின் அறைகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவு வழங்கப்படும்.

அதே நேரம், ஆராய்ச்சி மாணவர்கள் செய்முறைப் பணிக்காக வெளியே சென்று வந்தாலும், அவர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்துதலுக்குப் பின்னரே மீண்டும் வளாகத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐஐடி நிர்வாகம் சார்பில் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் வீட்டில் இருந்தே பணியாற்றக் கோரி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைப்புச்செய்திகள்