Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குற்றால அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி 

டிசம்பர் 15, 2020 05:51

சென்னை: குற்றால அருவியில் 9 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" (ஆரோக்கிய நீருற்று) என்றழைக்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கு செல்ல அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இன்று முதல் குற்றால அருவியில் அனைவரும் குளிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அருவிக் கரையில் உள்ள தீர்த்தவாரி விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமிநாசினியும் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து குளிக்கும் வகையில் போலீசார் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதித்தனர். இன்று குற்றால அருவி திறப்பதை அறிந்து பல மாவட்டங்களை சேர்ந்தோர் இரவோடு இரவாக கிளம்பி வந்து குற்றால அருவியில் குளித்து குதூகலித்தனர். அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்