Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் 

டிசம்பர் 15, 2020 06:06

சென்னை: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து இன்று தொடங்கியது. கோயில் இணைய தளத்தில் சொர்க்க வாசல் திறப்பின் போது ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

வைணவ திவ்ய தேசங்கள், 108ல் முதன்மையானதும்,  பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து கூறப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். மொத்தம், 7 பிரகாரங்கள். 54 உப சன்னதிகள் என 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாதம் நடைபெறும், உலகப் பிரசித்திப் பெற்ற, வைகுண்ட ஏகாதசி விழா திரு நெடுந்தாண்டகம் என்கிற நிகழ்வுடன் நேற்று தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி விழாவில், நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தமிழ் பாசுரங்களை, பகல்பத்து மற்றும் ராப்பத்து ஆகிய இருபது நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக, ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும். இதில் பகல் பத்து இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் நிறைவுப் பெற்று, ராப்பத்து திருவிழா வரும், 25ம் தேதி துவங்குகிறது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் என்கிற சொர்க்க வாசல் திறப்பு 25ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு  நடைபெறுகிறது. வரும் 4ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த 21 நாட்களும் மூலவர் முத்தங்கி அங்கி அணிந்து சேவை சாதிப்பார். உற்சவர் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதில் மற்றொரு முக்கிய நிகழ்வான, நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரம் வரும், 24ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழ் திருவிழா

திருமங்கை மன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை ஒரு கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். அதனை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம், 'என்ன வேண்டும்' என்று கேட்க, அதற்கு அவர் 'தனக்கு எதுவும் வேண்டாம். வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வதுபோல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும்' என்று கேட்டார். அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

இவ்வாறு நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு, நாதமுனி காலத்தில் (கி.பி.823-918) திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும் மற்றைய ஆழ்வார்கள் பாடிச் சென்ற தமிழ் பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக 'பகல்பத்து உற்சவம்' கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்ப் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த விழாவில் வெளிநாடுகள் உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்கான பந்தல், தடுப்புகள், கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் பந்தல்  உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு  கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  வரும், 24ஆம் தேதி மாலை முதல், 25ஆம் தேதி காலை 8 மணி வரை, ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

காலை, 8 மணிக்கு பிறகு ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின் படி தரிசனம் செய்யவும், சொர்க்க வாசல் கடந்து செல்லவும் அனுமதி வழங்கப்படும். ஆனால் சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்சவ நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 600 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும் வயதானவர்கள், குழந்தைகள்,  கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வருகை தருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பிற்காக கோயில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் கோயில் வளாகத்தில் சுழற்சி முறையில் 450 காவலர்கள் தற்போது பணியில் உள்ளனர். சொர்க்க வாசல் திறப்பின் போது 2,000  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், கோயில் உட்புறத்தில் 117, வெளிப்புறத்தில் 97 சிசிடிவி கேமராக்கள், நான்கு உத்திர வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனகளுக்கு நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்கில ஆண்டு கணக்கின்படி, நடப்பாண்டில் ( 2020) ஜனவரி 5ஆம் தேதியும் வரும் டிசம்பர் 25ஆம் தேதியும் என ஒரே ஆண்டில் இருமுறை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்