Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி -மத்திய அரசு அறிவிப்பு

டிசம்பர் 15, 2020 10:33

சென்னை: முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. அதன்படி, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

அதில் நாளொன்றுக்கு 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும், முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண சமீபத்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதேபோல் ஒரு மாவட்டத்துக்கு முடிந்தவரை ஒரே உற்பத்தியாளரின் தடுப்பூசியை வழங்க வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு, தடுப்பூசி எடுத்து செல்லும் கேரியர், குப்பிகள் மற்றும் தடுப்பூசியை பாதுகாக்கும் ஐஸ் கட்டிகள் நேரடியாக சூரிய ஒளியில் படுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரங்களை புதிதாக உருவாக்கப்படும் "கோ-வின்" என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்