Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிக்கு வாடகை செலுத்தாத விவகாரம்; லதா ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

டிசம்பர் 16, 2020 05:32

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என லதா ரஜினிகாந்தை எச்சரித்துள்ளது.

ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாரான லதா ரஜினிகாந்த், சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்தநிலையில், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி, இட உரிமையாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் பின்னரும் வாடகை பிரச்னை நீடித்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.

இந்தநிலையில், கரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தபடி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்க கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்து வருகிறார். இவ்வழக்கு நேற்றைய முன்தினம் (டிச.14) விசாரணைக்கு வந்தபோது, இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டிடிஎஸ் தொகை உட்பட எட்டு லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், அதனால் கால அவகாசத்தை இக்கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன் பின்னர், நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என, அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்தார்.

மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு தடை விதித்தார்.

தலைப்புச்செய்திகள்