Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிசம்பர் 19 முதல் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

டிசம்பர் 16, 2020 06:14

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தி கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கி உள்ளன. தற்போது அரசியல் கூட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.அரசு எடுத்து வரும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்