Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் உள்ளே செல்வார்கள்: உதயநிதி ஸ்டாலின்

டிசம்பர் 16, 2020 08:35

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் உள்ளே செல்வார்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அவர், இன்று திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஊரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் மற்றும் உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களை சந்தித்தார். அப்போது விளையாட்டு வீரர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது: 

வடுவூர் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கை மேம்படுத்த இப்பகுதி விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வடுவூர் கபடி விளையாட்டிற்கு மட்டுமல்ல. மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்ட ஊர். இந்த பகுதியில் இருந்துதான் ஒலிம்பிக்கில் முதல் முதலாக பதக்கம் வெல்ல முடிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் வடுவூர் விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் என்பதால் மத்திய அரசு செவி சாய்க்காது. மாநில அரசு விவசாயிகளின் பிரச்சனைகள் தெரிந்தும் தெரியாமல் உள்ளனர்.

எப்படி விமான சேவை ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைய வைத்தார்களோ அதேபோல விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க முயற்சி நடக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து விவசாயிகளை சந்தித்து வருகிறேன்.

திருத்த சட்ட மசோதா எங்களுக்கு தேவை இல்லை என விவசாயிகள் தொடர்ந்து என்னிடம் தெரிவித்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் தற்போது வெளிப்புறங்களில் கூட்டம் நடத்தாமல் கட்டிடங்களில் கூட்டம் நடத்தி வருகிறோம். வெளிப்புறங்களில் கூட்டம் நடத்தினால் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். அவர்களை தாண்டி காவல் துறையினரை குவித்து எங்களுக்கு பயத்தை உண்டாக்க பார்க்கிறார்கள். காவல் துறையினர் படும் அவதியை கண்டால் பாவமாக உள்ளது.

திமுகவிற்கு செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு உள்ளது. குறிப்பாக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தை வைத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பேசத் தொடங்கினாலே மக்கள் விழிப்புணர்வுடன் கேட்கிறார்கள்.

மத்திய அரசு பொதிகை தொலைக்காட்சி மூலம் சமஸ்கிருத மொழியை திணிக்க முயல்கிறது. ஏற்கனவே இந்தியை திணிக்க முயன்றார்கள் குலக்கல்வித் திட்டத்தை பிடிக்க முயன்றார்கள். 

இதெல்லாம் தமிழகத்தில் எடுபடவில்லை. எனவே வருகின்ற தேர்தலில் இவற்றிற்கெல்லாம் மக்கள் பதிலளிப்பார்கள்.ரஜினி அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அவர் அறிவித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

வேளாண் பெருத்த சட்டங்களுக்கு எதிராக திமுக பல போராட்டங்களை நடத்தியுள்ளது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கைகளை பெற்று வருகிறேன். அதனை திமுக தலைவரிடம் கொண்டு சேர்த்து மீண்டும் வேளாண் துறை சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள். திமுக தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

எனது அடுத்த கட்ட சுற்றுப்பயணம் 18ம் தேதி தொடங்குகிறது. எந்த பகுதி என்பது 16ஆம் தேதி அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்