Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; விவசாயிகளின் விதவை மனைவிகள் போராட்டம்

டிசம்பர் 17, 2020 09:29

சென்னை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய கடனால் இதுவரை உயிர் இழந்த விவசாயிகளின் விதவை மனைவிகள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று  22-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

இந்த போரட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பலர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  கடுமையான வானிலை அல்லது சாலை விபத்துக்களால் இறந்துவிட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். சிங்கு மற்றும் திக்ரியில் உள்ள விவசாய அமைப்புகள் தங்கள் குடும்பங்களுக்கு உதவ இந்த நபர்களின் பட்டியல்களை இப்போது தயார் செய்து வருகின்றன.

முதல் சம்பவம் நவம்பர் 27 அன்று டெல்லி-பிவானி நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் 45 வயதான தன்னா சிங்  பலியானதாக அறிவிக்கப்பட்டது. மான்சா மாவட்டத்தை சேர்ந்த சிங், 40 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை அணிதிரட்டி போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரது டிராக்டர் வேகமாக வந்தபோது  லாரி மீது மோதியதில் அவர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கீர்த்தி கிசான் யூனியனை சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கூறும்போது எங்களுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா  மாநில அரசுகளிடம் இருந்து அதிக உதவி கிடைக்கவில்லை. குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைகளை நாங்கள் விரும்புகிறோம் என கூறினார். விவசாய கடனால் உயிரிழந்த விவசாயிகளின் விதவை மனைவிகள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்