Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு; ஸ்டாலின் தலைமையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்

டிசம்பர் 18, 2020 05:12

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, தடையை மீறி திமுக தலைமையில், அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் திமுக தலைமையில், அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிச.18) ஒருநாள் அடையாள உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணா நிலை போராட்டம் மாலை 5 மணியளவில் நிறைவு பெறும். காவல் துறை அனுமதி மீறி திமுக தலைமையிலான உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா, ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர், திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தடையை மீறி ஸ்டாலின் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரத போராட்டம் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சங்கமித்த தலைவர்கள் சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

காவல் துறை அனுமதி இல்லை என்பதால் வள்ளுவர் கோட்டத்தில் அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் பகுதியில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 500க்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்