Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடையாளம் தெரியாமல் இறப்போரை ஆதார் மூலம் கண்டுபிடிக்க வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

டிசம்பர் 18, 2020 09:05

சென்னை: அடையாளம் தெரியாமல் இறப்போரின் கைரேகையைப் பயன்படுத்தி ஆதார் வழியே அடையாளம் காண உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்திட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை அரசு இராசாசி மருத்துவ மனையில் உடற்கூராய்வுக்கு பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் போது உரிய மரியாதையுடன் சடங்குகள் செய்யப்படுகின்றன.

ஆனால் ஆதரவற்றச் சடலங்களுக்கு எவ்விதச் சடங்குகளும் செய்யாமல் அரசு ஆம்புலன்ஸில் ஏற்றி சுடுகாட்டில் அரைகுறையாக அடக்கம் செய்யப்படுகின்றன. அவை சரிவர புதைக்கப்பட்ட காரணத்தால் நாய்கள் கடித்து சடலத்தை வெளியே இழுக்கும் அவலமும் நடைபெறுகிறது.

இறந்தவரை அடையாளம் காண இயலாத சூழலில் இதுபோன்ற அவலங்கள் நடைபெறுகின்றன. தற்போது சிம் கார்டுகளைப் பெறுவதற்கு ஆதார் எண் மற்றும் விவரங்கள் பெறப்படுகின்றன.

ஆகவே அதைப்போல காவல் துறையினரும் அடையாளம் தெரியாத உடல்களின் கைரேகை மூலமாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே கடந்த 10 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்கள் எத்தனை? என்பது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும் அடையாளம் தெரியாமல் இறப்போரின் கைரேகையை ஆதார் மூலம் அடையாளம் காண உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்