Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசின் ரூ.2500 பொங்கல் பரிசு அறிவிப்பை நான் விமர்சித்தேனா?

டிசம்பர் 21, 2020 07:34

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்குவதாக வெளியிட்ட தமிழக அரசின் அறிவிப்பை மோசமாக விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கமும் அளித்துள்ளார்.

இதுகுறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும் எதிர்த்தும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, முதல்வரின் அறிவிப்பை மோசமாக விமர்சித்ததாகத் தகவல்கள் வெளியாகின. கோயம்புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி இந்த வாதம் முன்வைக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தோழமைக் கட்சியை பாஜக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது. அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதைத் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களைக் குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க வளர்க தமிழ்நாடு.

பொங்கலுக்குக் கொடுக்கும் தொகையை ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக முதல்வர் உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்தப் பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்