Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களுக்கு காங்கிரஸ், திமுக மீது நம்பிக்கை இல்லை

டிசம்பர் 22, 2020 06:49

மதுரை: மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விளக்கக் கூட்டம் மதுரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நிருபர்களிடம் குஷ்பு கூறியதாவது:-

விவசாயிகள் போராட்டம் வட இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லியில் உள்ள விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என எதிர்க்கட்சிகள் அவர்களை தூண்டி விடும் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

பா.ஜனதா ஒரு முடிவு எடுத்தால் அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது, அது நன்மை விளைவிக்கும் முடிவாக இருக்கும் என மக்கள் நம்புகின்றனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் திட்டத்திலும் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. இதனை எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ளமுடியவில்லை. அதனால், இடைத்தரகர்களை வைத்து போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கான முழு விலையை பெற்று கொள்ள முடியும். யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியதிருக்காது. 2016-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட புதிய வேளாண் சட்டம் குறித்த தகவல் இருந்தது. அவர்கள் மாநில அளவில் கொண்டு வர நினைத்ததை பா.ஜனதா, நாடு முழுவதும் கொண்டு வந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி நான் செயல்படுவேன். பதவி மீது எனக்கு எந்த ஆசையும் கிடையாது. பதவிக்காக இதுவரை நான் எந்த கட்சிக்கும் சென்றது கிடையாது. கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பே அது குறித்து கருத்து கூறுவது சரியானதாக இருக்காது. பா.ஜனதாதான் உண்மையான அணி. எங்கள் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.விற்கு மக்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர். செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.விற்கு அதிக வரவேற்பு உள்ளது. வருகிற தேர்தலிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்