Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

படுகை அணைகளில் ஆபத்தை உணராமல் கூடும் பொதுமக்கள்

டிசம்பர் 22, 2020 07:20

திருக்கனூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சில தினங்களுக்கு முன்பு திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாகவும், வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் திருக்கனூர் பகுதியில் உள்ள படுகை அணைகள் நிரம்பி வழிகிறது.

சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண்பதற்காகவும் படுகை அணைகளில் குளிப்பதற்காகவும் பொதுமக்கள் அதிக அளவில் செல்லிப்பட்டு, சுத்துக்கேணி, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு வருகிறார்கள். விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம்கூட்டமாக படுகை அணை பகுதிகளுக்கு வருகை தந்தனர். பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

திருக்கனூர் அடுத்த கூனிமுடக்கு பகுதியில் வாய்க்காலில் குளித்த ஒரு சிறுவன் நீரில் மூழ்கி இறந்த காரணத்தினால் படுகை அணைகளில் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்ததுடன், உயிர் இழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நேரும் என அவர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் ஆபத்தை உணராத பொதுமக்கள் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி படுகை அணைகளில் இறங்கி குளித்தனர்.

செல்லிப்பட்டு பகுதியில் பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்ட படுகை அணை மையப்பகுதி சேதமடைந்து உள்ளது, இதனால் அணை உடையும் அபாயமும் இருக்கிறது.இதையெல்லாம் மக்கள் உணராமல் செல்லிப்பட்டு படுகை அணையில் கூட்டம் கூட்டமாக குளித்து வருகிறார்கள். பொதுமக்களின் அலட்சியம் ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்