Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இணைப்பு குறித்து யாரும் கருத்து கூறக்கூடாது: எடியூரப்பா

டிசம்பர் 22, 2020 07:33

பெங்களூரு: முதல்வர் எடியூரப்பாவை பெங்களூருவில் நேற்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனியார் பள்ளி நிர்வாகங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்து அவரிடம் எடியூரப்பா விவரம் கேட்டறிந்தார். தனியார் பள்ளி நிர்வாகங்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்படி சுரேஷ்குமாருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது. அவ்வாறு எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்க பாடுபடுகிறோம். குமாரசாமி தனது கட்சியை பலப்படுத்த முயற்சி மேற்கொள்கிறார். அவரவர்கள் தங்களின் கட்சி கொள்கையின்படி செயல்படுகிறார்கள். தேவகவுடா தொடங்கிய ஜனதா தளம் (எஸ்) கட்சியை குமாரசாமி வழிநடத்துகிறார்.

பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) இணைப்படுவதாக கூறுவது, குமாரசாமியை அவமதிப்பது ஆகும். இத்தகைய கருத்துகளை பா.ஜனதாவினர் யாரும் கூறக்கூடாது. எனது ஆட்சி காலம் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. நிறைய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை கேட்கிறேன். அதே போல் குமாரசாமியை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டேன். இதில் நாங்கள் கட்சிகள் இணைப்பு குறித்து பேசியதாக கூறுவது தவறானது என எடியூரப்பா கூறினார்.

தலைப்புச்செய்திகள்