Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையை கடந்த யானைக் கூட்டம்: போக்குவரத்து நிறுத்தம் 

டிசம்பர் 23, 2020 01:01

கிருஷ்ணகிரி : ஒசூா் அருகே உத்தனப்பள்ளி - நாகமங்கலம் சாலையை  30-க்கும் மேற்பட்ட யானைகள் ஒரேநேரத்தில் கடந்து சென்றதால் சிறிது நேரம்  வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய 3 வட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில், கா்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து இடப்பெயா்ச்சி ஆன 100-க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. 

இந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து உணவு தேடி அலைகின்றன. ஒசூா், சானமாவு, ஊடேதுா்க்கம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அய்யூா் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாயிகள் பயிா் செய்துள்ள ராகி, காய்கறி, கரும்பு போன்ற பயிா்களை உண்டும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்த யானைகள் பகல் நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதிகளில் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன. இந்நிலையில், சானமாவு காட்டில் இருந்த 30 க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் செல்லும் சாலையைக் கடந்து சென்றன. இதனால் அந்த வழியாகச் சென்ற டிராக்டா், லாரிகள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் வந்தவா்களும், நடந்து செல்பவா்களும் அப்படியே நின்று விட்டனா்.

புழுதியைக் கிளப்பியபடி ஒன்றன்பின் ஒன்றாக, வரிசையாக சிறிது இடைவெளி விட்டு அடுத்தடுத்து யானைகள் சாலையைக் கடந்து சென்றன. இதனை அப்பகுதி மக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த யானைகளின் இடப்பெயா்ச்சியை ஒசூா் கோட்ட வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். இந்த யானைகளை கா்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தலைப்புச்செய்திகள்