Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்

டிசம்பர் 24, 2020 09:26

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. சார்பில் இன்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

* அ.தி.மு.க. ஏழைகளைக் காக்கின்ற இரும்புக்கோட்டை. இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை நமக்குத் தந்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகழை எந்நாளும் காப்போம் என உறுதி ஏற்கிறோம்.

* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்தத் தமிழ் மண்ணை தாயாக நினைத்தார். தமிழ் மொழியை உயிராக நினைத்தார். தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தார். அவரது நினைவுகளை இதயத்தில் வைத்து, கழகப் பணி ஆற்றுவோம்.

* ஊழலை ஒழித்திட தர்ம தேவன், பசிப்பிணி தீர்த்து வைத்த வள்ளல், பார் புகழ நாடாண்ட இதய தெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் வழி நடப்போம்.

* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தந்தை பெரியாரின் மறுமலர்ச்சிக் கொள்கைகளை மனதிலே சுமந்து, பேரறிஞர் அண்ணாவின் லட்சியக் கனவுகளை நனவாக்க, நல்லாட்சி நடத்தி மக்களுக்கு மகிழ்ச்சி தந்தார். அரவணைத்து, அன்பு காட்டி, தொண்டர்களுக்கு உயர்வு தந்தார்.

* தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்று ஜனநாயகம் காப்பாற்றப்பட, புதிய எழுச்சி தந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் காப்போம்.

* மக்களின் வாழ்வு வளம்பெற, வசனத்திலே புரட்சி, நடிப்பிலே புரட்சி, அரசியலில் புரட்சி என்று புரட்சியின் வடிவமானார் எம்.ஜி.ஆர். அவர் காட்டிய புரட்சி வழியை நாமும் தொடர்வோம். மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

* ஏழை எளியோருக்காக திட்டங்கள், சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்காக திட்டங்கள், பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக திட்டங்கள், உழைக்கும் தொழிலாளர்களுக்காக திட்டங்கள், விவசாயிகளுக்காக விதவிதமான திட்டங்கள், நெசவாளர்களுக்காக திட்டங்கள், மீனவர்களுக்காக திட்டங்கள், மாணவர்களுக்காக திட்டங்கள் என்று திட்டங்கள் போட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அந்தத் திட்டங்கள் தொடர வேண்டும். அதை நிறைவேற்ற அம்மாவின் ஆட்சியும் தொடர வேண்டும். அதற்காக உழைப்போம்.

* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக அரசியல் வரலாற்றில், தொடர்ந்து மூன்று முறை, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்தவர். அவர் மக்களோடு வாழ்ந்தார். மக்களுக்காக வாழ்ந்தார். அவர் வழியிலே “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று வாழ்ந்தார் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா. அதனால் தான் அந்த மனித தெய்வங்களுக்கு மக்கள் மகுடம் சூட்டினார்கள். அந்தப் புகழ் மகுடத்தை எதிரிகள் எவரும் தட்டிப் பறிக்க முடியாது. தட்டிப் பறிக்க விட மாட்டோம். தொண்டர்கள் விட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

புரட்சி தலைவர் செய்த சாதனையைப் போல, அவருடைய விசுவாசத் தொண்டர்களாகிய நாம் தான் தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சி அமைப்போம். மக்கள் ஆதரவு நமக்கே இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசி நமக்கு இருக்கிறது. அம்மா அவர்களின் ஆன்மா நமக்கு துணை நிற்கிறது. என்றும் வெற்றி, எதிலும் வெற்றி, என்று முழங்கிடுவோம். அதற்காகவே உழைத்திடுவோம்.

வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரர்களாகிய கழக உடன்பிறப்புகள், சிங்கமென தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம். சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம். எதிரிகளின் பொய் முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

இருள் இல்லாத தமிழ்நாடு, பசி இல்லாத தமிழ்நாடு, புரட்சி தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி, தொடர்ந்து புரட்சி தலைவி அம்மாவின் நல்லாட்சி, விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி. மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் அம்மாவின் ஆட்சி, மீண்டும் மலர... ஒற்றுமையுடன் பாடுபடுவோம். உளமாற பாடுபடுவோம். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு பாடுபடுவோம்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கற்றுத்தந்த பணிவு நம்மோடு இருக்கிறது. புரட்சி தலைவி அம்மா கற்றுத் தந்த துணிவு நம்மோடு இருக்கிறது. அந்த பணிவோடும், துணிவோடும், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை, நிகழ்த்தி காட்டுவோம் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை கூறி வீர சபதம் ஏற்கிறோம், சரித்திரம் படைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம் எனக்கூறினர்.

தலைப்புச்செய்திகள்