Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்சிக்கு விரோதமான கருத்து: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு நிர்வாகிக்கு பாஜக நோட்டீஸ்

டிசம்பர் 24, 2020 10:13

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் கட்சிக்கு விரோதமான கருத்து கூறியதாக பாஜக மகளிர் அணி தலைவர் அக்னிமித்ரா பாலுக்கு 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்தவாரம் மேற்கு வங்கத்திற்கு தேசியத் தலைவர் அமித்ஷா வருகையின்போது திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். அப்போது பாண்டேஸ்வர் தொகுதி எம்எல்ஏ., ஜிதேந்திர திவாரி கட்சியில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட பாஜகவின் மாநிலப் பிரிவின் உயர் மட்ட தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவில் நிறைய எதிர்ப்புகள் உருவானதை அடுத்து திவாரி மீண்டும் திரிணமூல் காங்கிரஸிற்கு திரும்பிச் சென்றார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பாஜகவுக்கு விரோதமாக பேட்டியளித்ததாக பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசுவுக்கு பாஜக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவருடன் சேர்ந்து மேற்கு வங்கத்தின் மகளிர் அணி (மகிளா மோர்ச்சா) தலைவர் அக்னிமித்ரா பாலுக்கும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பாஜக துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி கூறுகையில், ''கடந்த வாரம் அக்னிமித்ரா பால் கூறிய சில கருத்துக்களுக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்," என்று தெரிவித்துள்ளார்.

அக்னிமித்ராவுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், ''கட்சிக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்க நீங்கள் துணிந்துள்ளீர்கள், அவை கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக நேரடியாக செல்கின்றன, " என்று பாஜக தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்