Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் காலமானார் 

டிசம்பர் 25, 2020 08:49

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் தொ.பரமசிவன். காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் முதுகலை தமிழ் பயின்றவர். தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் தொ.ப. எனும் பேராசிரியர் தொ. பரமசிவன். பண்பாடு, சமயங்கள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக மேற்கொண்டவர்.

இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளில் தமிழ்த்துறையில் பணியாற்றியுள்ளார். திராவிட சிந்தனைகளுடன் கூடிய ஆய்வு முறையை கையாண்டவர் தொ. பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியவர்.

மதுரை அழகர் கோவில் தொடர்பான தொ.பரமசிவத்தின் ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக் கூடிய ஆகச் சிறந்த நூலாகும். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவராக 98 முதல் 2008 வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன்.

தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் குறித்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் நேற்றிரவு தொ.பரமசிவன் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கும், ஆய்வு உலகத்துக்கும் மிகப் பெரிய பேரிழப்பாக்கும் என அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் தங்களது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்