Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து மதியம் முடிவு

டிசம்பர் 27, 2020 08:33

ஐதராபாத்: ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் நலமடைந்து விட்டதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மதியம் முடிவெடுக்க உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த கட்சி அறிவிப்பை டிச.31 அன்று வெளியிடுவதாகத் தெரிவித்து, அதற்குமுன் 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்துக்குச் சென்றார்.

அங்கு படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு திடீரென கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நேற்று மீண்டும் அவரது உடல் நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டது. "தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் ரஜினி இருப்பார். அவரது நிலையற்ற ரத்த அழுத்த மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு முழுமையாக ஓய்வெடுக்கவும், அவரைப் பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அவரது பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்த அளவு அடிப்படையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்று மாலை தீர்மானிக்கப்படும்" என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ''அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் வந்துகொண்டிருக்கின்றன. அச்சப்படும்படியாக எதுவும் முடிவும் இல்லை. மருத்துவர்கள் குழு இன்று மதியம் அவரது உடல்நிலையை மதிப்பீடு செய்து அவர் வீடு திரும்புவது குறித்து தீர்மானிப்பார்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதன்பின் அவர் சென்னைக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தகவல் இல்லை.
 

தலைப்புச்செய்திகள்