Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய கொரோனாவின் அசுர வேகம்

டிசம்பர் 27, 2020 08:55

புதுடெல்லி: முன்பை விட சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பரவி வரும் கொரோனாவை காட்டிலும் சக்திவாய்ந்த கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

புதிய கொரோனாவை தவிர்க்கும் வகையில் இந்தியா உள்பட ஏராளமான உலக நாடுகள் இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறைந்தது 12 நாடுகளுக்காவது புதிய கொரோனா பரவிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் 12 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதில் 8 நாடுகள் ஐரோப்பாவை சேர்ந்தவை. பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு புதிய கொரோனா பரவியுள்ளது.

பழைய கொரோனா வைரஸ் வயது முதிர்ந்தோரை எளிதாக தாக்கிவிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், புதிய கொரோனா வைரஸ் இளம் தலைமுறையினரிடையே மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் தாக்கம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசியாக பிரான்ஸ் இணைந்துள்ளது. லண்டனில் இருந்து டிசம்பர் 19ஆம் தேதி பிரான்ஸ் வந்தவருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்