Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டி சுங்க சாவடி முற்றுகை

டிசம்பர் 28, 2020 09:26

திருநெல்வேலி: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் திருநெல்வேலி நாங்குநேரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளையும் முழுமையாக பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள மத்திய அரசின் சுங்கச்சாவடியை திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டத் தலைவர் தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மதவாத பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களும் நாடெங்கிலும் இருக்கின்ற ஒட்டுமொத்த விவசாயிகளையும் முழுமையாக பாதிக்கக்கூடிய மிகவும் அபாயகரமான சட்டங்கள் ஆகும். 

விவசாயிகளின் ஜனநாயக  உரிமைகளை காவு கொடுக்கச் செய்யும் இந்த நஞ்சு சட்டங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுவரையிலும் விவசாயிகளுக்கு ஆதரவான எஸ்டிபிஐ கட்சியின் இந்த போராட்டம் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

முற்றுகை போராட்டத்தில் கட்சியின் நெல்லை புறநகர்  மாவட்டப் பொதுச் செயலாளர் களந்தை மீராசா, செயலாளர் கல்லிடை சுலைமான், பொருளாளர் துலுவை ஒயிஸ்,  மேலும் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஹமது நவவி ஆகியோர் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் வலியுறுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும்  கைது செய்த காவல் துறையினர்  சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களை விடுவித்தனர்.

தலைப்புச்செய்திகள்