Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி - மத்திய அரசு தீவிர ஆலோசனை

டிசம்பர் 28, 2020 10:07

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்கான தடுப்பூசி மருந்துகள் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’, அமெரிக்காவின் ‘மாடர்னா’ உள்ளிட்ட சில தடுப்பூசி மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபற்றி மத்திய அரசு ஆய்வு செய்தது.

இந்த மருந்துகளில் எந்த மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கொடுப்பது என்பது பற்றி கடந்த சில தினங்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து திருப்திகரமான முடிவுகளை தந்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இங்கிலாந்தில் இந்த மருந்து வெற்றி பெற்று உள்ளதால் பல கோடி டோஸ்களை இப்போதே இந்த நிறுவனம் உற்பத்தி செய்து விட்டது.

இது தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஏற்கனவே கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஓரிரு நாட்களில் முடிவெடுத்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துக்கு அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தவிர பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து மற்றும் ஐதராபாத் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பு மருந்து ஆகியவற்றையும் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கோவிஷீல்டுக்கு பிறகு இந்த நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வரலாம் என்று தெரிகிறது. இன்றும், நாளையும் நடக்கும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்கு பிறகு அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்