Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்ரோ தலைவர் கே. சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு

டிசம்பர் 31, 2020 07:24

 சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் கே. சிவன் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தை அமைத்து வருவது, சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. என்ற புதிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அத்துடன் சாதனை திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கே.சிவன் தலைமையில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஒரே ராக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது, செயற்கைகோள்களை புவி வட்டப்பாதையில் ராக்கெட்டுகள் நிலைநிறுத்துவதை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேரலையாக பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது உள்பட விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கே.சிவனுக்கு சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் கே.சிவனின் பதவிகாலம் வருகிற ஜனவரி 14-ந்தேதியோடு நிறைவடைகிறது. விண்வெளித்துறை பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக அவரது பதவிக்காலத்தை வருகிற 2022 ஜனவரி 14-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்