Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் வாக்குறுதி: மக்கள் வேதனை

ஏப்ரல் 03, 2019 12:47

வேலூர்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது சோளிங்கர் சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவை சேர்ந்த தற்போது அமமுக அமைப்பு செயலாளராக உள்ள பார்த்திபன், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. 

இந்த சோளிங்கர் தொகுதியில் கடந்த வாரம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக – பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அப்போது சோளிங்கர் நரசிங்கபெருமாள் கோயிலுக்கு விரைவில் ரோப் கார் அமைத்து தரப்படும் என பேசினர். 

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி திமுக வேட்பாளர்கள் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அசோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றவுடன் ரோப் கார் வசதி அமைத்து தரப்படும் என வாக்குறுதிகளுள் ஒன்றாக தந்தார். அதிமுக, திமுக, பாமக தலைவர்களின் பேச்சை கேட்டு கட்சியினரும், பொதுமக்களும் அதிர்ச்சியாகியுள்ளனர். 

சோளிங்கர் நகரில் உள்ள பிரபலமான நரசிங்கபெருமாள் கோயில் வேலூர், திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. சோளிங்கர் நகருக்கு வெளியேவுள்ள மலை மீது இந்த கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் நூற்றக்கணக்கான படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்பதால் ரோப் கார் அமைத்து தரவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர். இதனை ஏற்று 2006 - 2011 ஆட்சிக்காலத்தில் அதற்காக அடிக்கல் நாட்டியது திமுக. இதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பின் என்ன காரணமோ பணிகள் நடக்கவில்லை. 
 
2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 9.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் தொடங்கி நின்றது, 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் பணிகள் தொடங்கியது, மீண்டும் நின்றது. தற்போது அந்த பணிகள் நடந்து வருகின்றன. 60 சதவீத பணிகள் நடந்து முடிந்துவிட்டது. மீதியிருப்பது 40 சதவீத பணிகள்தான். ஓராண்டில் அந்த பணிகளும் முடிந்து ரோப் கார் செயல்பட துவங்கும் நிலையில் உள்ளது. 

இப்படிப்பட்ட நிலையில் ரோப் கார் அமைக்கப்படும் என தலைவர்கள் வாக்குறுதி தருவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மற்ற கட்சியில் இருப்பவர்கள் தகவல் தெரியாமல் பேசுகிறார்கள் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால், தமிழகத்தை நிர்வாகம் செய்யும் முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், அதேபோல் பேசுவது வேதனையாக உள்ளது. இவர்கள் என்ன நிர்வாகம் செய்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர் என்பது எவ்வளவு பொறுப்பான பதவி. அப்படிப்பட்ட பதவியில் இருந்துகொண்டு இப்படி விவரமில்லாமல் பேசுவது நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். 
 

தலைப்புச்செய்திகள்